இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார்.
மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட பொது சுகாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் அதிகாரிகள் பதிலளிக்க வேண்டுமென ஐ.நா மனித உரிமைத் தலைவர் வோல்கர் டர்க் (Volker Türk) அறிக்கை ஒன்றின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளார்.
“டிசம்பர் 17 முதல் போதைப்பொருள் தொடர்பான விடயங்களில் 29,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, சிலர் தவறான நடத்தை மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. பாதுகாப்புப் படையினர், தேடுதல் அனுமதி இன்றி சோதனைகளை நடத்தியதாகவும், சந்தேகத்திற்கிடமான போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் பயனர்களை கைது செய்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் இராணுவத்தால் நடத்தப்படும் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகளின் போதும் அதற்குப் பின்னரும், அங்கீகரிக்கப்படாத தேடுதல்கள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல், மோசமான முறையில் நடத்துதல், சித்திரவதை செய்தல் மற்றும் பொது இடங்களில் ஆடைகளை அகற்றுதல் போன்ற பல மீறல்களுக்கு மக்கள் உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. காவலில் வைக்கப்பட்டவர்களுக்காகச் செயல்படும் சட்டத்தரணிகள், பொலிஸ் அதிகாரிகளின் அச்சுறுத்தலை எதிர்கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
போதைப்பொருள் பாவனையானது சமூகத்திற்கு ஒரு கடுமையான சவாலை முன்வைக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் தலைவர், ‘கடுமையான சட்ட அமுலாக்க அணுகுமுறை’ தீர்வு அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனை மற்றும் அதற்கு வழிவகுக்கும் காரணிகள் முதலாவதாக பொது சுகாதாரம் மற்றும் சமூக பிரச்சினைகளே என அவர் குறிப்பிட்டார்.
நடவடிக்கை தொடர்பான மீறல்கள் பற்றிய அறிக்கைகள் குறித்து எச்சரிக்கையை எழுப்பிய அவர், போதைப்பொருள் விற்பனை அல்லது கடத்தல் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதற்கு தகுதியானவர்கள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
