முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக மலர்வளையம் வைத்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குருந்துவத்தை பொலிஸார் கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸிடம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
யாரோ அல்லது குழுவொன்று வீட்டு வாயிலுக்கு முன்பாக மலர்வளையம் வைத்து அச்சுறுத்தி அவமானப்படுத்தியதாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் புதல்வி பவித்ரா ஜயந்திகா ரம்புக்வெல்ல குருந்துவத்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குருந்துவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பரிசோதகர் ஆலோகா பி. சேனாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உத்தியோகபூர்வ இல்லம் அமைந்துள்ள கொழும்பு 7 பகுதியின் சிசிரிவி காட்சிகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
