அநீதி என ஏற்கனவே விமர்சிக்கப்பட்ட அரசாங்கத்தின் ‘யுக்திய’ நடவடிக்கை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
பொலிஸாரின் தேடுதல்கள், கைதுகள் தொடர்பிலான காணொளிக் காட்சிகளை ஊடகவியலாளர்கள் ஒளிபரப்புவது தனியுரிமை மீதான கடுமையான மீறலென அந்த ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
டிசம்பர் 17ஆம் திகதி முதல் 31ஆம் திகதி முதலான வரையான காலப்பகுதிக்குள் 20,000ற்கும் அதிகமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக, குறிப்பிட்டுள்ள மனித உரிமை ஆணைக்குழு போதைப்பொருளை திட்டமிட்ட குற்றச்செயல்களிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஆபத்தான போதைப்பொருட்களை கடத்துவதையும் தடுப்பது மிகவும் அவசியமான நோக்கம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள மனித உரிமை ஆணைக்குழு எனினும் யுக்திய நடவடிக்கையின்போது சித்திரவதைகள் ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற முறையில் நடத்துதல் கண்மூடித்தனமான கைதுகள் தடுத்துவைத்தல் என்பன காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
யுக்திய நடவடிக்கை குறித்து கடும் கரிசனையை வெளியிட்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இது யுக்திய என்ற சிங்கள சொல்லிற்கு பொருத்தமற்றதாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளின் போது இளைஞர்கள் உட்பட்டவர்களை ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற விதத்தில் நடத்துதல் குறித்த அறிக்கைகளால் கலக்கமடைந்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (virakesari with some inputs)



