கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் பொலிஸார் போன்று ஆடையணிந்து திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைத்தொலைபேசி விற்பனை நிலையமொன்றிலேயே இந்த திருட்டு முயற்சி நேற்று (4) இடம்பெற்றுள்ளதாக வீரகேசரி செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் 37 மற்றும் 38 வயதுடைய கடற்படை வீரர்கள் எனத் தெரிவிக்கபடுகிறது.
இந்த வார ஆரம்பத்தில் குறித்த வர்த்தக நிலையத்திற்கு வந்த நால்வர் பொலிஸ் அடையாள அட்டையை காண்பித்து விற்பனை நிலையத்தை பரிசோதனை செய்யவுள்ளதாக கூறியுள்ளனர்.
பின்னர் பணியாளரிடம் கூரிய ஆயுதத்தை காண்பித்து அச்சுறுத்தி 6 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணமும் பணியாளரின் கையடக்க தொலைபேசியையும் பெற்றுக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விற்பனை நிலைய உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர்களை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
