ஐக்கிய இராச்சிய அரசு மற்றும் வட அயர்லாந்து அரசு சமகாலத்தில் சமுத்திர ஆரோக்கியம் தொடர்பான உலகளாவிய தொடக்க முயற்சிகளுக்கு தலைமைத்துவம் வகித்து வருகின்றது.
அதற்கமைய, 2030 ஆண்டாகும் போது உலகளாவிய சமுத்திரங்களில் குறைந்தபட்சம் 30 வீதத்தைப் பாதுகாப்பதும், சமுத்திரப் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான நீலப் பொருளாதாரத்தை அடைவதற்காக 500 மில்லியன் யூரோ பெறுமதியான “Blue Planet” நிதியத்தை உருவாக்குவதற்கும், பங்காள நாடுகளுக்கு அதன்மூலம் தேவையான நிதியுதவி வழங்குவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய நடவடிக்கைகள் திணைக்களத்தால் “Blue Planet” நிதியத்தின் விருப்புக்களை அடைவதற்காக இருதரப்பு மற்றும் பல்தரப்பு மட்டத்திலான வேலைத்திட்டங்கள் பல திட்டமிடப்பட்டுள்ளன.
குறித்த வேலைத்திட்டங்களில் ஒன்றான சமுத்திர அரசுகளுக்கிடையிலான பங்காண்மை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு தகைமை வாய்ந்த நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, சமுத்திர அரசுகளுக்கிடையிலான பங்காண்மை நிகழ்ச்சித்திட்டத்திற்கான ஒத்துழைப்புக்காக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் ஐக்கிய இராச்சிய அரசு மற்றும் வட அயர்லாந்து அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு ஏற்புடைய ஏனைய அமைச்சுக்கள் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் கருத்துக் கேட்டறிதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
